நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடன்கள் ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். இந்த கடன் ரத்து திட்டத்தின் மூலம் சுமார் 4 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று மக்களவையில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் தெரிவித்தார். தனி நபர் வருமான வரிவிதிப்புக் கான வரம்பையும் சிதம்பரம் உயர்த்தி அறிவித்துள்ளார்.

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று காலை 11 மணியளவில் மக்களவையில் தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விவசாய கடன் ரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2007 ஆம் ஆண்டு மார்ச் 31ந் தேதி வரையில் சிறு மற்றும் குறு விவசாயி கள் வாங்கியிருந்த கூட்டுறவு உள்ளிட்ட வணிக வங்கிகளின் கடன்களை ரத்து செய்யும் விவசாய கடன் ரத்து மற்றும் நிவாரண திட்டத்தை அவர் வெளியிட்டார்.

1 ஹெக்டேர் விவசாய நிலத்தை சொந்தமாக கொண்ட குறு விவசாயிகள், 1 முதல் 2 ஹெக்டேர் நிலத்தை உடமையாக கொண்ட சிறு விவசாயிகள், வணிக வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன்கள் இந்த திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படுவதாக சிதம்பரம் அறிவித்தார்.

மற்ற விவசாயிகளை பொறுத்த
வரை தங்களது கடன் பாக்கிகளை ஒரே தவணையில் செலுத்தும் நிவாரண திட்டமும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிவாரண திட்டம் வரும் ஜூன் 30ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்கள் ரத்து செய்யப்படுவதாகவும் இதன் மூலம் 3 கோடி குறு விவசாயிகளும், மற்ற விவசாயிகள் 1 கோடி பயன் பெறுவார்கள் என்று சிதம்பரம் அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மேஜைகளை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

வருமான வரிவரம்பு உயர்வு
நிறுவனங்களில் பணியாற்று வோரும், மாத ஊதியம் பெறுவோரும், தொழில்செய்வோரும் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த தனிநபர் வருமானவரி வரம்பையும் சிதம்பரம் உயர்த்தி அறிவித்துள்ளார்.

1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என்ற தற்போதைய வருமானவரம்பு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை சம்பாதிப்போர் வருமானவரி செலுத்த வேண்டியது இல்லை.


மகளிருக்கான வருமானவரி வரம்பு ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கான வருமானவரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அதற்கான உபரி வரிவிதிப்பிலும் மாற்றம் இல்லை என்றும் சிதம்பரம் அறிவித்தார்.
ஊரக வேலைவாய்ப்பு விரிவாக்கம்

வரும் நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 2.6 சதவீதமாக இருக்கும் என்றும், பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் நாட்டில் உள்ள அனைத்து 596 ஊரக மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், இதற்கு முதல்கட்டமாக ரூ.16 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

வரி சலுகைகள்
பல்வேறு வரி சலுகைகளையும் சிதம்பரம் அறிவித்துள்ளார்.
விளையாட்டு சாதனங்களுக்கான வரி 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், சிறு கார்களுக்கான வரி 16லிருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.


குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் மீதான கலால் வரி 16லிருந்து 8 சதவீதமாகவும், உரம் தயாரிக்க பயன்படும் கச்சா கந்தகத்தின் மீதான வரி 5லிருந்து 2 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.

பில்டர் அல்லாத சாதாரண ரக சிகரெட்டுகளுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. விவசாய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களுக்கான சுங்கவரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

உயிர் காக்கும் மருந்துகள் மீதான சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து பாதியாக குறைக்கப்பட்டு 5 சதவீதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பாலிமர் தயாரிக்க பயன்படும் நாப்தா மீதான வரி அடியோடு ரத்து செய்யப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ள தாகவும், விவசாய கடன்கள் இரு மடங்காக உயர்த்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


புதிய வருமானவரி
ரூ.1.50 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு வரி இல்லை.
ரூ.1.50 லட்சத்திற்கு மேல் ரூ.3 லட்சம் வரை 10 சதவீத வரி.
ரூ.3 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை 20 சதவீத வரிவிதிப்பு.